A great life is a political philosophy  cm mk stalin

Advertisment

தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் அமைந்துள்ள வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10.15 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாநகராட்சி துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்ட வடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது. பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே. பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை” என தெரிவித்துள்ளார்.