Skip to main content

தாத்தாவை கொன்று நாடகமாடிய பேரன்...! காவல்துறையிடம் சிக்கியது எப்படி..?

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

The grandson who is the reason for grandfather passes away and made a play, How did the police get caught

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர். அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன், செல்லியம்மன் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக பணிபுரிந்து வந்த இவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரையும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு வெகு நேரமாகியும் தவலிங்க செல்வராயர் வீட்டிற்கு வராததால் பதறிப்போன அவரது மகன் மற்றும் உறவினர்கள், இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். மறுநாள் காலை அக்கிராமத்தில் உள்ள விருத்தகிரி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் தவலிங்க செல்வராயர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

 

இதைக் கண்ட கிராமத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ உத்தரவின் பேரில் கொலைக் குற்றவாளியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதேசமயம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காத வரை உடலை வாங்க மாட்டோம் என்று இறந்துபோன தவலிங்க செல்வராயரின் மகன்கள் மற்றும் உறவினர்கள் திட்டவட்டமாக கூறினர்.

 

The grandson who is the reason for grandfather passes away and made a play, How did the police get caught

 

கடந்த 10 நாட்களாக, இறந்தவர்களை எடுத்துச் செல்லும் பாடை கட்டப்பட்டும், புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியும் மூடாமல் இருந்தன. மோப்ப நாய் உதவியுடனும், தடவியல் நிபுணர்களின் உதவியுடனும், விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், கொலையா? தற்கொலையா? சொத்துத் தகராறால் கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈடுபட்டு சந்தேகத்துக்கு உரியவர்கள் என 40-க்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், காவல்துறையினருக்கு பத்து நாட்களுக்குப் பின்பு, இறுதியாக இறந்துபோன தவலிங்க செல்வராயரின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி வசமாக சிக்கிக்கொண்டார்.

 

இறந்துபோன தவலிங்க செல்வராயரின் பேரனும், மூத்த மகனான வெங்கடேசனின் மகனுமான ரஞ்சித் குமாரை கடந்த 8ஆம் தேதி இரவு தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார் தவலிங்க செல்வராயர். அதன் பின்பு வேறு எவ்வித அழைப்பும் செல்லாத நிலையில், அதே தேதியில் இறந்து போனவரின் பேரனான ரஞ்சித் குமாரின் தொலைபேசியில் இருந்து இரண்டு அழைப்புகள் அதே ஊரைச் சேர்ந்த வேறொரு நபருக்கு சென்றுள்ளது. அதனை நோட்டமிட்ட காவல்துறையினர், ரஞ்சித் குமார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்துரை மகன் செல்வகுமார் இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

The grandson who is the reason for grandfather passes away and made a play, How did the police get caught

 

விசாரணையில், தவலிங்க செல்வராயரின் மூத்த மகனின் மனைவியான ரஞ்சித் குமாரின் தாயாருடன், தாத்தாவாகிய தவலிங்க செல்வராயர் முறையற்ற தொடர்பில் இருப்பதைக் கண்டதால் ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டது போல் தெரியாமல் இருப்பதற்காக, தடுக்கி விழுந்து கற்களில் மோதி இறந்தது போல் நூதன முறையில் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்பு தனது நண்பனான செல்வகுமார் துணையுடன் இறந்துபோன தவலிங்க செல்வராயரின் உடலை அதே கிராமத்தைச் சேர்ந்த விருத்தகிரி என்பவர் நிலத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். 

 

பின்னர் எதுவும் தெரியாதது போல், மறுநாள் காலை 09ஆம் தேதி பொதுமக்களுடன் பொதுமக்களாக, தாத்தா இறந்துகிடப்பதைக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றும், கண்ணீர் விடுவதுபோல் நடித்தும், அப்பாவியாக உறவினர்களை நம்ப வைத்துள்ளார். அதேசமயம், மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பரான செல்வகுமார் ஆகிய இருவரும் ஊரில் இல்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முறையற்ற தொடர்பால் சொந்த தாத்தாவையே கொலை செய்துவிட்டு, கொலைக்கான எவ்வித ஆதாரத்தையும் விட்டுச் செல்லாமல் தப்பித்து விடலாம் என பொய்க் கணக்கு போட்ட ரஞ்சித் குமாரின் கணக்கை தவிடுபொடியாக்கியுள்ளனர் விருத்தாச்சலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர். 

 

கடந்த 10 நாட்களாக இரவு பகல் பாராமல் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்