ADVERTISEMENT

இறப்பு சான்றிதழ் வாங்கிய பாட்டி; உயிரோடு வந்த பேரன்!

03:35 PM Aug 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்திகேயன். இவரது மனைவி பூங்காவனம். இவர்களுக்கு ஹரிஹரன், கோபி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்திரா நகரில் உள்ள வீடு தொடர்பாக பூங்காவனத்திற்கும் அவரது தாயார் சின்னப்பொண்ணுவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பூங்காவனம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சில நாட்களில் அவரது கணவர் கார்த்திகேயன் திடீரென மாயமானார். அவர் எங்குள்ளார் என்பது தெரியவில்லை. இதனால் ஹரிகரன் தனது பாட்டி சின்னப்பொண்ணு வீட்டிலும், அவரது தம்பி கோபிநாத் தனது சித்தி மகள் வீட்டிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டை அபகரிப்பதற்காக நில இடைத்தரகர்களுடன் இணைந்து சின்னப்பொண்ணு தனது பேரன் கோபிநாத் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் பெற்று அதன் மூலமாக குடும்ப அட்டையில் இருந்து கோபிநாத் பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியான கோபிநாத் தனது உறவினர்களுடன் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், எஸ் பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இறப்பு சான்றிதழ் தந்த அரசு அதிகாரிகள், விசாரிக்காமல் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வருமே என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது,.

இதனால் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதற்காகவும், தனக்கு நீதி கிடைக்காமல் போனதால் ஆட்சியர் அலுவலகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் கோபிநாத் மற்றும் அவரது உறவினர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்ததுடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

உண்மையை மறைத்து உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கியது ஒருபுறம் என்றால் மாயமாய்ப்போன கார்த்திகேயன் எங்கே என்கிற கேள்வி எழுந்துள்ளதால், போலீஸார் அதனையும் அந்தப் பாட்டியிடம் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT