
சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அடையாறில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்துவருவதைக் கண்டித்து அடையார் மத்திய கைலாஷ் கோயில் அருகே பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. இனி ஐ.ஐ.டியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்க எனக் கூறப்பட்டுள்ளது.