/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdsdf.jpg)
கனடா நாட்டில் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்ற ஆசை வலையில் அப்பாவித்தனமாகச் சிக்கிக்கொண்ட பட்டதாரி வாலிபரிடம் மர்ம நபர்கள், நூதன முறையில் 8.13 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
சேலம் ஜாகீர் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் விஜய சரவணன் (26). பி.காம்., பட்டதாரி. இவர், இணையதளத்தில் வேலைக்காகப் பதிவு செய்திருந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு, கனடா நாட்டில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வந்தது. இதில் ஆர்வம் அடைந்த விஜய சரவணன், தனக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கனடா நாட்டிற்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, மருத்துவக்காப்பீடு உள்ளிட்டவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எதிர் முனையில் பேசிய கும்பல், 5 வங்கிக் கணக்குகளைக் கொடுத்து, அவற்றில் 8.13 லட்சம் ரூபாயைப் பிரித்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். விஜய சரவணனும் வேலை கிடைத்து விடும் நம்பிக்கையில் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தார்.
ஆனால் அதன்பிறகு அந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, அதற்கு யாரும் பதில் அளிப்பதில்லை. அதையடுத்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த விஜய சரவணன், இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)