Skip to main content

ஆற்றங்கரைகளில் 'நாவல்' விதைக்கும் பட்டதாரி ஆசிரியர்!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

Graduate teacher sowing novel seeds in riverside

 

 
இளைஞர்கள் இயற்கை மீது கொண்டுள்ள காதல் அதிகமாக உள்ளது. நீர்நிலைகளைப் பாதுகாத்தல்.. பாதுகாக்கப்படும் நீர்நிலைகளில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். அதேபோல பனை விதைகள் விதைப்பதை தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 லட்சம் பனை விதைகளை விதைத்தனர். அதில் பாதிக்கும் மேல் துளிர்க்கத் தொடங்கி உள்ளது. அதேபோல இந்த ஆண்டும் பனை விதைகளைச் சேகரித்து விதைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

      

இந்த நிலையில்தான் வழக்கமாக பனை விதைகள் சேகரித்து விதைக்கும் கொத்தமங்கலம் பனசக்காடு பட்டதாரி ஆசிரியர் சி.அன்பரசன் தற்போது பனை விதைகளுடன் நாவல் விதைகளும் சேகரித்து விதைத்து வருகிறார். சுமார் 10 ஆயிரம் நாவல் மர விதைகளை அம்புலி ஆற்றங்கரைகளில் விதைக்க திட்டமிட்டு விதைகள் சேகரித்து விதைத்து வருகிறார்.

     

பனசக்காடு அம்புலி ஆற்றங்கரையில் நாவல் மர விதைகளை விதைத்துக் கொண்டிருந்த அன்பரசன் கூறும் போது, “வழக்கமாக பனை விதைகள் சேகரித்து பொது இடங்களில் விதைப்பேன். கடந்த ஆண்டு விதைத்த பனை விதைகள் துளிர்த்து வருகிறது. அதேபோல உணவுக்காக தடுமாறும் பறவைகள், குருவிகளுக்காக பழமரங்களை வளர்க்க நினைத்து இப்போது கிடைக்கும் நாவல் பழங்களின் விதைகளைச் சேகரித்து அம்புலி ஆற்றில் விதைத்து வருகிறேன். அதிலும் செடிகளுக்கிடையில் விதைகள் விதைத்தால் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வளரும் என்பதால் ஆற்றங்கரையோர செடிகளுக்கு மத்தியிலும் விதைக்கிறேன்.  

      

நாவல் விதைகளை பல கிராமங்களுக்குச் சென்று சேகரித்து வருகிறேன். இந்த வருடம் சுமார் 10 ஆயிரம் நாவல்மர விதைகளாவது விதைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முன்னெடுப்புக்கு முதல்வர் வாழ்த்து

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

The CM congratulates the progress of the Palm Tree Workers Welfare Board

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் நாளை (01.10.2023) தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞரின் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் 01-10-2023 அன்று தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் நியமிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

 

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இவ்வாரியம் க்ரீன் - நீடோ சுற்றுச் சூழலமைப்பு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு இலட்சம் தன்னார்வலர்களும் இணைந்து ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தை வெற்றிபெறச் செய்யவுள்ளார்கள் என்பது நெஞ்சுக்கு இதமளிக்கிறது.

 

The CM congratulates the progress of the Palm Tree Workers Welfare Board

 

தமிழ்ச் சமூகத்துக்கு வாழ்நாள் எல்லாம் பல வகையிலும் பல துறையிலும் பயனளித்திட்ட  கலைஞர் நூற்றாண்டில் முன்னெடுக்கப்படும் இந்த சீரிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன். இதற்காகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசனையும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனையும் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"கள்ளுக் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர்" -  என்.ஆர். தனபாலன் 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

dhanabalan talks about palm juice  shop related karur meeting

 

கரூரில் தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத் தலைவர் என்.ஆர். தனபாலன் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகளும் புது நிர்வாகிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

 

விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநிலத் தலைவர் என்.ஆர். தனபாலன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, "தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரத்தின் கள் ஒரு இயற்கை உணவாகும். கள்ளு குடித்து உயிர் இழப்பு ஏற்படுவதை நிரூபித்தால், எங்கள் பேரவையின் சார்பில் ஒரு கோடி பரிசு தருகிறோம் என அறிவித்தோம். பின்னர் பத்து கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை. பனையால் விவசாயி வாழ்வான். பனை மரத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வார்கள். தேர்தல் வரும் பொழுது பனை மரத்தை பாதுகாப்போம் பனைமரத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்போம் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள்.

 

கள்ளுக் கடை திறந்தால் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்து கள்ளுக் கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழக அரசுக்கு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே ஒரு கோரிக்கை கள்ளுக்கடைகளை தமிழகம் முழுவதும் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆகும். தமிழகம் விளையாட்டுத்துறையில் மேம்பட்டு விளங்கவும், ஒலிம்பிக்கில் கபாடியை கொண்டு சேர்த்ததும் இன்னும் எண்ணற்ற நலன்களை விளையாட்டு துறைக்கு செய்த சிவந்தி ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கடைகளை தமிழகத்தில் திறக்காவிட்டால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.