Advertisment

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி! - பொறி வைத்துப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

bribe incident in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் அடரியை அடுத்த கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் நல்லதம்பி (36), இவர் தனது கடைக்கு புதிய மின் இணைப்பு வழங்கக்கோரி அடரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், மின்சார வாரிய வணிக ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரனை நேற்று மதியம் 1.30 மணியளவில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

அதனைப் பெற்றுக் கொண்ட மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரன், புதிய மின் இணைப்புக்கு அரசுக் கட்டணம் 3418 ரூபாய், எனக்கு 6500 ரூபாய் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் உனது கடைக்குப் புதிய மின் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.இதைக்கேட்ட நல்லதம்பி மறுநாள் பணம் எடுத்து வருவதாகக் கூறி வந்துவிட்டார்.

இந்நிலையில் நல்லதம்பி இன்று காலை 10 மணியளவில் கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்தார். நல்லதம்பி அளித்த புகாரையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. மெல்வின்ராஜசிங் தலைமையிலான லஞ்சஒழிப்பு போலீசார் உடனடியாக இன்று மதியம் 12 மணியளவில் அடரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து மாறுவேடத்தில் இருந்துள்ளனர்.

Advertisment

நல்லதம்பியுடன் ஒரு லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது அங்கிருந்த மின்சார வாரிய வணிக ஆய்வாளர் ரவிச்சந்திரன் நல்லதம்பியிடம் 'நீ உன் கடை புதிய மின் இணைப்புக்காக அரசுக்குக் கட்ட வேண்டிய தொகையை அலுவலகத்தில் நீயே கட்டிக்கொள், எனக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டும் கையூட்டாகக் கொடு' என்று கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிக் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை நல்லதம்பி ரவிச்சந்திரனிடம் கொடுக்க அதை அவர் பெற்றுக்கொண்டார்.

இதையறிந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மெல்வின்ராஜசிங் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் வந்து ரவிச்சந்திரனை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Bribe Cuddalore incident police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe