Advertisment

“தமிழக அரசு சாதி ஆதிக்க வெறியை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” - முத்தரசன்

govt should suppress caste dominance with an iron hand says Mutharasan

Advertisment

தமிழ்நாடு அரசு சாதி ஆதிக்க வெறியை இரு கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பூங்கொடி க/பெ. பி.ராஜ்குமார். நேற்று (05.11.2024) இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கணவர் ராஜ்குமார், மகன்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகியோர் பூங்கொடியை காரில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் பெரியார் நகர் அருகில், எதிரில் அதீத வேகத்தோடு, தவறான பாதையில் வந்த வாகனம், மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் நிலை தடுமாறி காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி பார்க்கும் போது, எதிரில் வந்த வாகனத்தை ஓட்டி வந்தவரும், அவருடன் வந்தவர்களும் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியவர்களை தடுத்து, படுகேவலமான ஆபாச வார்த்தைகளில் திட்டிய படி, எந்த ஊர் என்று விசாரித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார், "தம்பி நாங்க பக்கத்தில் இருக்கும் பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவங்க, வயசுக்காவது மரியாதை கொடுத்து பேசுங்க" என கேட்டு கொண்டதை சாதி ஆதிக்க வெறியில் இருந்தவர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் ராஜ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு மக்களை திரட்டி கும்பல் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் தாக்கப்பட்ட ராஜ்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்து விட்டார். ராஜ்குமாரின் இளைய மகன் செல்லமணி கை எலும்புமுறிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய கொடிய சம்பவத்தை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து பாரஞ்சி கிராம மக்கள், தங்கள் கிராமத்தினர் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத தாக்குதலுக்கும், ஒருவரை அடித்துக் கொன்று விட்ட கொடூரத்துக்கும் நீதியும், நியாயமும் வழங்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக நேரடியாக தலையிட்டு, சாதி ஆதிக்க வெறியை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதுடன், காரணமானவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கையினை உறுதியாக மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

cpi police TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe