Govt school wall collapse incident; 3 cows lost thier live

சென்னை பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் சுற்று வட்ட மதில் சுவரின் வெளிப்புறத்தில் அப்பகுதியில் தீவனம் தேடி சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மதில் சுவரின் அருகே படுத்து இளைப்பாறிக் கொண்டு இருந்தன. அப்போது 6 அடி உயரமுள்ள அந்த மதில் சுவரானது திடீரென இடிந்து அங்குப் படுத்துக் கொண்டிருந்த மாடுகள் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மூன்று கறவை மாடுகள் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உயிரிழந்த மாடுகளை உடற்கூறு ஆய்வுக்காகக் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுப்புற மதில் சுவர் கடந்த சில ஆண்டுகளாகவே சிதிலமடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் அச்சுவரை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மதில் சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவு தான் 3 கறவை மாடுகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டது, நல்வாய்ப்பாகப் பள்ளிக்கு விடுமுறை நாள் என்பதால் மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.