தமிழ்நாடு முழுவதும் கல்வி கற்றலை நவீனமயமாக்கும் முயற்சியாகத் தமிழ்நாடு முழுவதும் 6990 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகள் வழங்கப்பட்டு தனியாக ஹைடெக் கணினி ஆய்வகம் அமைக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 10 கணினிகளுடன் தொடுதிரை, கேமரா, தடையில்லா மும்முனை மின்சாரம், அதற்கான பேட்டரி, 100 எம்பிபிஎஸ் திறன் கொண்ட அதிவேக இணைய வசதி ஆகியவை செய்து ஓரிடத்தில் இருந்து வகுப்புகள் நடத்தினால் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாணவர்கள் பாடம் கற்க வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான ஒப்பந்தத்தை வெளிமாநில நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
ஒப்பந்த நிறுவனம் ஒவ்வொரு பள்ளிக்கும் கணினிகளைக் கொண்டு வந்து ஆய்வக அறையில் பொருத்தி வைத்துள்ளனர். ஆனால் பல பள்ளிகளில் சரியான மின் இணைப்புகள், பேட்டரி இணைப்புகள், இணைய இணைப்புகள் வழங்காமல் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தான் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் ஹைடெக் கணினி ஆய்வகங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாகத் திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார் என்று அறிவிக்கப்பட நிலையில் அவசர அவசரமாக கணினிகளைப் பொருத்தும் பணியை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் சுமார் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவழித்து கணினிகளைப் பொருத்தி வைத்துள்ளனர். ஆனால் பல பள்ளிகளுக்கு பி.எஸ்.என்.எல். இணைய இணைப்பு கொடுக்கும் வசதிகள் இல்லாமல் இணைய இணைப்பே இல்லாமல் ஏராளமான பள்ளிகள் தடுமாறி வருகின்றனர். முதலமைச்சர் நிகழ்ச்சியில் செல்போன் இணையத்தைப் பயன்படுத்த ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும் போது, "தமிழ்நாடு அரசின் கணினி ஆய்வகம் என்ற அருமையான திட்டத்தை வரவேற்கிறோம். இந்த திட்டத்திற்கான பணிகளைச் செய்த ஒப்பந்த நிறுவனம் கடமைக்குப் பணி செய்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் முதல்வர் திறக்க உள்ளார் எல்லா கணினிகளையும் உடனே இணையத்தில் இணையுங்கள் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர். ஏராளமான கிராமப்புற பள்ளிகளுக்கு இணைய இணைப்பு கொடுக்க கேபிள் வசதி இல்லாததால் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறோம். திட்டம் அறிமுகம் செய்யும் போதே பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இணைய இணைப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் நல்ல திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ஏராளமான பள்ளிகள் இணைய வசதி கிடைக்காமல் தவிக்கிறது. இதன் பிறகாவது உடனே இணைய வசதி கிடைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த திட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் பயனடைய முடியும் இல்லை என்றால் இதுவும் வழக்கமான திட்டமாக முடங்கிவிட வாய்ப்புகள் உள்ளது" என்கின்றனர்.