Skip to main content

மாணவர்களிடம் வசூல் வேட்டை; அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்!

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Govt school headmaster job suspended in Hosur

 

ஓசூர் அருகே, மாணவர்கள், பெற்றோர்களிடம் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்திய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்  பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.     

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள முல்லை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அலெக்சாண்டர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி வளர்ச்சிப் பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறி மாணவர்கள், பெற்றோர்களிடம் 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளதாக புகார்கள் கிளம்பின.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் புகார் சென்றதை அடுத்து, முதன்மைக் கல்வி அலுவலரை விசாரிக்க உத்தரவிட்டார். புகாரில் முகாந்திரம் இருந்ததால் முதற்கட்டமாக அலெக்சாண்டரை எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர். ஆனாலும், தொடர்ந்து அவர் பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவரை ஜூன் 20ம் தேதி பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.