
அண்மையில் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து அக விலைப்படி உயர்வு தொடர்பாகவும் தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் அக். 31 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியும் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் ஊர் திரும்ப அவகாசம் தரும் வகையில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாழன் (தீபாவளி நாள்), வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரம் நவ். 1 தேதி விடுமுறையை ஈடுகட்ட நவ்.9 ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.