
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் ஓலை குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கல்வி புகாத பகுதியாக இருந்த இந்தப் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் - தங்கை என இருவர் மட்டுமே கல்லூரி வாசலை மிதித்திருக்கின்றனர். தினக்கூலி வேலைக்குச் செல்லும் இந்த மக்கள் வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகளின் கல்வியைப் பற்றி நினைப்பதில்லை. கடந்த பல வருடங்களாக தன்னார்வலர்களின் விழிப்புணர்வால் அப்பகுதி குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். பள்ளிகள் தூரமாக இருப்பதால் பல நாட்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை.
அதே போல கீரமங்கலம் அறிவொளி நகர் பழங்குடியினர் காலணியில் இருந்தும் பள்ளி செல்லும் குழந்தைகள் பிரதானச் சாலைகளில் செல்ல வேண்டியுள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே எங்கள் குழந்தைகளுக்காக எங்கள் தெருவில் பள்ளி வேண்டும் என்று பல வருடமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் இரு பகுதிகளிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிப்பருவ குழந்தைகள் இருப்பதால் அவர்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யாமல் இருக்க வாகன வசதி வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களுடன் சேர்ந்து நாமும் கோரிக்கை வைத்திருந்தோம். இந்த கோரிக்கையையடுத்து பல கட்ட ஆய்வுகள் நடந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு மாநிலத்திட்டக் குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், கறம்பக்குடி ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் திருவரங்குளம் ஒன்றியத்தில் சுக்கிரன்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்கள் படிக்கும் அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புளிச்சங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வேன் மூலம் ஏற்றிச் சென்று விடவும் மாலை அழைத்து வரவும் அதே போல கீரமங்கலம் அறிவொளி நகரில் இருந்து கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா புதன் கிழமை காலை கீரமங்கலம் அறிவொளி நகரில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. மாணவர்களுக்கான வேனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இன்று இதற்கான முன் ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை) முருகையன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கருணாகரன், கவிதா, முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதி பெற்றோர்கள் கூறும் போது, “எங்கள் குழந்தைகளின் கல்விக்காக வேன் வசதி செய்து கொடுத்துள்ள அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை வேனில் ஏற்றிச் செல்கிறார்கள். ஆனால் அதற்கு மேல் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளையும் வேனில் ஏற்றிச் செல்ல வேண்டும். அவர்கள் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் தனியாக சென்றுவர அச்சப்பட்டு பல நாட்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கின்றனர். அதனால் மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.