
தஞ்சாவூர் மாவட்டம் செஞ்சிபட்டியில் உள்ள தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்குச் சுற்றலா பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்று (21.05.2025) இரவு வந்தது. அதே சமயம் தஞ்சாவூரில் இருந்து, திருச்சிக்குச் சென்ற அரசு பேருந்தும் வந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசு பேருந்தும், வேனும் இந்த பாலத்தில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அதோடு இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதாவது சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.