Advertisment

“சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்” - ஆளுநர் தொடர் குற்றச்சாட்டு

Governor's continued accusation against tamilnadu government in his Republic Day speech

Advertisment

குடியரசு தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், “தமிழ்நாட்டின் எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம். பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த மங்கலமான தருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாநிலமான தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. இதன் வளமான திறமைகள்-திறன்களைக் காணும் போது, இதனால் நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும். இப்படிச் செய்ய வேண்டுமென்றால், நமது மாநிலம் அதன் உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால் இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின் நிலை 5 கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் தாம் நமது மிக மதிப்பு வாய்ந்த சொத்துக்கள். இவர்கள் தாம் நமது எதிர்காலம். தமிழ்நாடு வளர வேண்டுமென்று சொன்னால், மிகச் சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும். மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது. ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.

நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக் கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. இரண்டு இலக்க கூட்டல்- கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும். உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை. நமது 20 மாநில பல்கலைக்கழகங்களில், சுமார் 25 இலட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவை மோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை. இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் சேர்க்கைக்குத் தேவையான நிதி பல்கலைக்கழகங்களிடம் இல்லை.

Advertisment

பத்து பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகவே பதிவாளர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல் இருக்கின்றன. அவை தற்காலிக அடிப்படையில் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறை எந்த அளவுக்குத் தீவிரமாக அழிக்கப்பட்டு விட்டது என்றால், அவற்றை பல்கலைக்கழக மாமன்றக்குழு அல்ல, மாநில தலைமைச் செயலகமே அவற்றை நிர்வாகம் செய்கின்றன. பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் ஆளுமையின் கீழ் சட்டபூர்வமான வகையிலே வரக்கூடிய பாடத்திட்டத்தை அமைக்கும் குழு விஷயத்தில், மாநில அரசின் உயர்கல்விக் குழு தயாரித்தளிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலைக்கழக அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு, காவல்துறையின் அவமானகரமான உளைச்சலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது;

கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமானக வலையை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப் பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள் கூட்டமைப்புக்களின் தொடப்படுவதில்லை. முக்கியப்புள்ளிகள் போதைப்பொருள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் சீராக அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகரித்து நீதி வரும் வேளையில், மறுக்கவும்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது. 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச்சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 மனிதர்கள் இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச்சாராயத்தால் நிலைகுலைந்து போயின. ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் இலாபம் அடையும் கள்ளச்சாராயத்தின் பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையையே சமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா அவர்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.

சில ஆண்டுகள் முன்புவரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமது மாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து மற்ற 8 மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். தெலங்கானாவும், ஹரியானாவும் ஒருகாலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள்; ஆனால் இப்போது அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிட்டார்கள். குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும்.

ஒரு சமூகத்தில் நடக்கும் தற்கொலைகள் தாம் அதன் சமூக மற்றும் பொருளாதாரத் துயரின் அளவுகோல். நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு சராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. நமது மாநிலமான தமிழ்நாட்டிலோ, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமானது. நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாடு தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவு ஆய்வாளர்கள். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், ஏழைகள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரத் துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும் எதிரானது. இதில் விரிவான உடனடி இடையீடு தேவைப்படுகிறது. நண்பர்களே, தேசிய புலனாய்வு முகமை-NIA எனும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய முகமை, நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தீவிரவாத வலையமைப்புக்களின் அலகுகளையும், இரகசியமாகச் செயல்படும் தீவிரவாதிகளையும் அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது. இவற்றில் சில தீவிரவாத அலகுகள், ஆஃப்கனிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச தீவிரவாத வலையமைப்புக்களோடு தொடர்பு கொண்டவை. தேசிய பாதுகாப்பு பற்றிய மிகமிகத் தீவிரமான கவலையை அளிக்கும் விஷயம் இது. இது நமது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நமது பொருளாதாரத்தைக் கடுமையாகத் தகர்க்கக்கூடிய திறன் கொண்டது. மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும், அமலாக்க முகமைகள் தீவிரத்தோடு அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Republic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe