publive-image

Advertisment

இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத்தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஸ்டெர்லைட் நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர்” எனக்கூறியிருந்தார். மேலும் அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “துணிச்சலாக ஏற்கவோ எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது அழகல்ல” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில், அதிமுக தற்போது ஆளுநரின் ஸ்டெர்லைட் விவகாரத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி, “மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தப் பிரச்சனையில் கடந்த கால அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை சொல்வது அழகல்ல. ஆட்சியாளர்கள், மக்களின் உணர்வுகளையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு முடிந்த நிகழ்வு குறித்து அவர் கருத்து சொல்வது என்பது சற்று வேதனையாக உள்ளது.

இந்திய பிரதமர் மோடி, தன்னுடைய கடுமையான உழைப்பாலும்தன் நாட்டு மக்களை காக்க வேண்டும் என எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் உலகத் தலைவராக உயர்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே பிரதமர் மோடி, அந்நிய பணம் இங்கே வருவதற்கு அனுமதிக்கமாட்டார். அப்படி வருபவர்களை அவர் அடையாளம் கண்டு சிறையில் அடைப்பார்” என்று தெரிவித்தார்.