Skip to main content

“இந்திய அறிவியல் சமூகத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” - தமிழக ஆளுநர்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Governor of Tamil Nadu says Congratulations to the Indian scientific community for making our nation proud

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்த நிலையில், ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 இன்று (06-01-24) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்து அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நமது விண்வெளி விஞ்ஞானிகளின் மற்றுமொரு அசாதாரண சாதனையாக இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுக்கலனான ஆதித்யா-எல்1, இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, லாக்ரேஞ்ச் பாயின்ட் 1-ல் அதன் இலக்கை எட்டியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காகவும், நமது தேசத்துக்குப் பெருமை சேர்த்து மகிமைப்படுத்தியதற்காக ஒட்டுமொத்த இந்திய அறிவியல் சமூகத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது விண்வெளி முயற்சிகள் மனிதகுல நலனுக்காக பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்து வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்