Governor should act like that CM MK Stalin Interview

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், அ. வெற்றியழகன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர் அ. சிவஞானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வடசென்னையைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு வளர்ந்த சென்னையாக ஒரு ஆண்டுக் காலத்தில் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தேன். ஒவ்வொரு பிரச்சனையிலும் ஆளுநர் அரசுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார். அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. எனவே ஆளுநர் அதனைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்குச் சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். எனவே அதனை பொருட்படுத்தவும், பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த தவறு காரணமாகத் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து முதலீடு பெறப்பட்டு தொழிற்சாலைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” எனப் பேசினார்.