Governor? Sanatak Kavalara? - Murasoli Review!

ஆளுநர் சட்டத்தின் ஆட்சியைத் தான் பேச வேண்டுமே தவிர மனுதர்ம ஆட்சியைப் பேசுவது சரியல்ல என்று முரசொலி நாளேடு விமர்சித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் அதிகமான குழப்பத்தை விதைத்து வருவதாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான தலையங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆளுநரா? சனாதனக் காவலரா? என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அதில், நீட் விலக்கு மசோதாவில் கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு, பின்னர் மசோதாவைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இதேபோன்று, புதிய கல்வி கொள்கைக்கு பி.ஆர்.ஓ. போல ஆளுநர் தினமும் அதைப் பரப்பி வருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. தேசத்தை எந்த பிரிவினையும் இன்றி பார்ப்பதாகக் குறிப்பிடும் ஆளுநர் பா.ஜ.க.வில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் என ஏகப்பட்ட அணிகள், எதற்கு கட்சிக்கு ஒரே தலைவர் என்ற அடிப்படையில், மாநில தலைவர் எதற்கு எனக்குரல் எழுப்பியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் உதிர்த்து வரும் ஆன்மீக தத்துவ முத்துகள் அபத்தக் களஞ்சியமாக உள்ளது என்றும் முரசொலி விமர்சித்துள்ளது. அவரின் பேச்சு தன்னை சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் வகையில் இருப்பதாகவும், குடியரசுத் தலைவரை பூரி ஜகநாதர் கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததே சனாதன தர்மம் என்பதை ஆளுநர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

மனிதனை சாதியாக பிரித்து, சாதிக்குள் உயர்வு, தாழ்வு என்று புகுத்தி இன்னார்க்கு இன்னது என்று வகுத்ததற்கு பெயரே சனாதனம் என்றும் முரசொலி விளக்கம் அளித்துள்ளது. மாநிலத்தின் ஆளுநர் சட்டத்தின் ஆட்சி படி பேச வேண்டுமே தவிர, மனுவின் ஆட்சியை அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.