
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி "நாம் கொண்டாடும் பண்டிகைகள், நடனங்கள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் கதைகள் என அனைத்தும் நமது நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் தான் இருக்கிறது. இங்குள்ள மக்கள் பூமியை தாயாக மதித்து மரியாதை செய்கின்றனர். உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது. நம்மில் பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். இந்த ஒற்றுமையின் மூலம் நாம் அனைவரும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம்.
ஒன்றுபட்டு இருந்த இந்திய ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டன. இது நமது கலாச்சார நாகரிகத்தில் இடைவேளை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால், இன்றைய நிலைமை வேறு. தற்போதைய மாறுபாடுகள் தெளிவாகக் காட்டப்படுகின்றன. இதன் மூலம் சமூகம் தொடர்ச்சியாக வாழ வழி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டமாக அரசியல் வரையறைகள் மோசமாகப் பாதித்ததன் விளைவாக நமது கலாச்சாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு, அதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள மாநிலங்கள் நமது தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டன. இருப்பினும், பாரதம் என்ற ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நாட்டு மக்களையும் தாய் மண்ணையும் இரு கண்களாகப் பார்க்கிறார். நமது நாட்டை பற்றிய உலகநாடுகளின் பார்வை மாறிவிட்டது. அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கப்படுகின்றன. இது புரட்சிகரமான மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நமது தேசம் வளரும். அதன் மூலம் நமது தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை மக்களுக்கு உள்ளது" என்று பேசினார்.