மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவு பரிசு விழா இன்று (12-04-25) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மாணவர்களிடையே ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷத்தை ஆளுநர் எழுப்பினார். ‘நான் சொல்கிறேன், நீங்களும் திரும்ப சொல்லுங்கள்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் ஜெய் ஸ்ரீராம் என கோஷத்தை முழக்கமிடக் கூறினார். பல சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட வைத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.