“Governor R.N. Ravi He has become a BJP  leader himself

Advertisment

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது; “தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனத்தை மீறி சர்ச்சை கருத்துகளை சொல்வதை தொழிலாகவே கொண்டு உள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் விஷத்தை கக்கியுள்ளார். திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்றும் ஒரே பாரதம் கொள்கையை போன்றது அல்ல என்றும் பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார்.

Advertisment

ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை பற்றி பேச இவர் என்ன அரசியல் தலைவரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழகத்தின் அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி சிறிதும் அறியாத கவர்னர் ரவிக்கு, அது குறித்து பேச என்ன யோக்கியதை இருக்கிறது? சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட இருந்தோம். அவர் உடனே ஒப்புதல் அளித்ததால் கண்டனப் போராட்டமாக நடத்தினோம். தி.மு.க.வின் கொள்கை என்பது மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. மாநில நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கிற இயக்கம். ஆனால், கவர்னர் கூறுகிற ஒன்றே பாரதம், ஒரே நாடு என்பது பா.ஜ.க.வின் கொள்கை.

இந்தியாவில் அனைத்திலும் ஒற்றைத் தன்மையையும், ஒற்றை ஆட்சியையும் நோக்கமாகக் கொண்டது. மத்தியில் அதிகாரக் குவியலை வளர்க்கிற இயக்கம் பா.ஜ.க. இந்த இரண்டிற்கும் இருக்கிற வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் கவர்னர் விதண்டாவாதம் பேசியிருக்கிறார். அரசியல் சாசன பதவியில் இருக்கும் கவர்னர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார். அனைவரும் ஓரணியில் திரண்டு கவர்னரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.