Advertisment

முதல்வருக்கு தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து 

Governor R.N. Ravi congratulates the CM mk stalin by signing in Tamil

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் இன்று (01.03.2025) திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளியில் சேருகின்ற மழலைகளின் சேர்க்கைக்கான சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதோடு அவர்களை வாழ்த்தி தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். இதனையடுத்து பெரியார் திடலில் தந்தை பெரியாருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதே போன்று சி.ஐ.டி காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவப்படங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

Advertisment

அதன் பின்னர் சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவர், அக்கட்சியின் தொண்டர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் கையெழுத்திட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் இன்று தங்களுடைய 72வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழ் நாட்டு மக்களுக்குச் சேவை ஆற்றிடவும் இந்நன்னாளில் தங்களை வாழ்த்துகிறேன். அன்புடன், ஆர்.என்.ரவி” எனத் தமிழில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் பதிவில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

birthday stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe