‘விலை மதிப்பற்ற உயிர்கள் பலியானதற்கு வேதனை அடைகிறேன்’ - தமிழக ஆளுநர் இரங்கல்

Governor RN Ravi condolences  families of the  Madurai train accident

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்தது.

இந்த நிலையில், இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், ஐஜி, எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என ஆறுதல் கூறியுள்ளார்.

madurai Train
இதையும் படியுங்கள்
Subscribe