,

மத்திய அரசின் இணை அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப்பேட்டியளித்தார்.அப்போது அவர், " புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல்துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்து முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Advertisment

புதுச்சேரியில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களைக் கைது செய்வது வாடிக்கையாகின்றது அதே நேரம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம். மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகின்றது" என்றார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், " ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயல்படுகின்றனர். அவர்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்று எப்படிக் கேட்க முடியும்? ஆளுநர்கள் தி.மு.கவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும் எனக் கேட்பது நடக்காது. தமிழகத்தில் தி.மு.க அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் கேள்வி கேட்கின்றார். அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்று கேட்பதா? புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்றார். "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளாரே..." எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு "இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய முடிவெடுக்கும்" எனத்தெரிவித்தார்.