ADVERTISEMENT

“ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்” - சபாநாயகர் அப்பாவு அதிரடி

12:15 PM Feb 12, 2024 | prabukumar@nak…

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (12.02.2023) காலை சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ADVERTISEMENT

ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்துவதற்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார். பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் பட்ஜெட் விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். பொது நிதிநிலை அறிக்கையின் மீது விவாதம் 21 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும். பிப்ரவரி 22 ஆம் தேதி நிதி அமைச்சரின் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெறும்.

தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT