Advertisment

"ஆளுநர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்"- சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் பேச்சு!

publive-image

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (08/02/2022) காலை 10.00 மணிக்கு சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Advertisment

பின்னர், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட, கல்வி உரிமையை மீட்டெடுக்க இன்று நாம் கூடியுள்ளோம். எனது பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீட்டை இந்த சட்டமன்றம் தான் உறுதி செய்துள்ளது. நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால் முடியும். 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டப் பாதுகாப்பைப் பெற்றது இந்த சட்டமன்றம் தான்.

Advertisment

நுழைவுத்தேர்வு ஒழிப்புச் சட்டத்தை இயற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது இந்த சட்டமன்றம் தான். அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல நீட் தேர்வு. நீட் தேர்வு விலக்கிற்காக மட்டுமல்ல; இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையைக் காக்க, சமூக நீதியைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது. நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமானது. 2019- ல் 4 பேர், 2020- ல் 5 பேர், 2021- ல் 15 பேர் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மத்திய அரசே கூறியுள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற ஆள் மாறாட்ட நிகழ்வுகள் கூட நடந்துள்ளன. நீட் தேர்வு என்பது மாணவர்களை கொல்லக் கூடியது; அது நீட் தேர்வு அல்ல; பலிபீடம். சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கு அனுப்பிய நீட் தேர்வு தேவையா?

தேர்வர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நீட் தேர்வில் வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது. தேர்வு எழுத மாற்று நபர்களை பயன்படுத்துவது, நீட் மதிப்பெண்களின் திருத்தும் உள்ளிட்ட நீட் தேர்வு மோசடிகள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஊரக மாணவர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது நீட்; அவர்களது கனவுக்கு தடுப்புச் சுவர் போடுகிறது.

சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துகள் கேட்ட பிறகே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது. நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநிலப்பாடத் திட்ட மாணவர்கள் பெற்று வந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற தீண்டாமையை நாம் அகற்ற வேண்டாமா? நீட் விலக்கு மசோதாவைத் திருப்பியனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் சரியானவை அல்ல.

நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது. மாநில கல்வித்திட்டத்தின் கீழ் வினாத்தாளை தயாரிக்காதது மிகப்பெரிய பாகுபாடு. மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியதன் மூலம் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்வி குறியாகியுள்ளது. சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியுமென்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன? சமூக நீதி மட்டுமல்ல; மாநில சுயாட்சியும், திராவிட இயக்கத்தின் கொள்கைதான்.

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவுக்கே ஒளி விளக்கை ஏற்றி வைக்கிறோம். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என இதே சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும். மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவைத் தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe