Skip to main content

“ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Governor is BJP today It has become a party says CM MK Stalin

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பசும்பொன் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் மரியாதை செலுத்தினர்.

 

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “மீனவர்கள் கைது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவ்வப்போது உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொடர்பு கொள்கிறோம். பிரதமருக்கும் பல கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அவ்வப்போது சில முயற்சிகளில் அவர்களை விடுவிக்கிறோம்.

 

அண்மையில் கூட இராமநாதபுரம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி கிடைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த செய்தி கிடைத்தவுடனே, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் அவரைத் தொடர்பு கொள்ள இன்று காலையில் கூட நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலுவை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் அங்கு சென்று இது குறித்துப் பேச சொல்லியிருக்கிறேன், அதுமட்டுமல்லாமல், இராமநாதபுரம் பகுதியில் இருக்கக்கூடிய மீனவர் சமுதாயத்தின் சில நிர்வாகிகளையும் போகச் சொல்லியிருக்கிறோம். அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று இந்தப் பிரச்சனை குறித்து நேரடியாகச் சென்று பேச சொல்லியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

 

Governor is BJP today It has become a party says CM MK Stalin

 

அதனைத் தொடர்ந்து ஆரியம் திராவிடம் குறித்து சர்ச்சை உருவாக்கப்படுகிறதே எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “இன்னார்க்கு மட்டுமே இது என்று சொல்வது ஆரியம். ‘எல்லார்க்கும் எல்லாம் உண்டு’ என்று சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தை, இந்த உண்மையை தயவுசெய்து ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “ஏற்கனவே இதுகுறித்து மத்திய அரசிடம் சொல்லியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

 

இறுதியாக ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பாட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. மாளிகைக்கு வெளியில் தெருவில் வீசப்பட்டிருக்கிறது. அதனுடைய சிசிடிவி காட்சிகள் எல்லாம் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களை அழைத்து வெட்டவெளிச்சமாக காண்பித்திருக்கிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து திட்டமிட்டு இந்தப் பொய் பரப்பப்படுகிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகையும் பி.ஜே.பி கட்சியின் அலுவலகமாக மாறியிருக்கிறது அதுதான் வெட்கக்கேடு” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்