/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rn-ravi-art-6_0.jpg)
தனி நபர்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இதனால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கடந்த நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டமுன்வடிவை (26.04.2025) அறிமுகம் செய்து உரையாற்றினார்.
இதனையடுத்து இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் கடனை வசூலிக்கும்போது வலுக்கட்டாயமாக வெளி முகமைகளைப் பயன்படுத்துவது வாகனங்களை எடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் கடன்பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாராவது தற்கொலை செய்துகொண்டால் அதற்குக் கடன் வழங்கிய நிறுவனம் அல்லது கடன் வசூலிக்கும் முகமை வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால் அது பாரதிய நியாய சங்கீதா சட்டத்தின் (BNS) கீழ் 180வது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். மேலும் கடன் வழங்கும் நிறுவனம் முறையாக உரியப் பதிவுச் சான்றிதழ்கள் பெறாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு இந்த சட்டத்தின் கீழ் பல்வேறு தண்டனைகளானது விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட மசோதா விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ் விதிக்கும் மசோதா, தமிழக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் அபராதங்களை குறைப்பது தொடர்பான சட்ட மசோதா, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா மற்றும் தமிழக நகர் ஊரமைப்பு திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)