
நாகை அருகே வேளாண்துறைக்கு சொந்தமான வாகனத்தில் மதுபானம் கடத்திய வேளாண்துறை ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைதாகியிருப்பது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. மது அருந்துவோரின் திண்டாட்டத்தை சாதகமாக்கிக்கொண்ட கள்ளச்சாரய வியாபாரிகள், எரிந்த வீட்டில் இழுத்தவரை லாபம் என்பதுபோல ஸ்பிரிட் பவுடரை தண்ணீரில் கலக்கி லட்ச லட்சமாக சம்பாதித்தனர்.
சிலர் காடுகள், வாய்க்கால் புதர்கள், வீடுகளிலும் கூட ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி விற்றனர். பல இடங்களில் அரசு டாஸ்மாக் ஊழியர்களே இரவு நேரங்களில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் நான்கு மடங்கு விலையை உயர்த்தி விற்றனர். போலீசாரும் அவ்வப்போது நாங்களும் இருக்கோம் என்பதுபோல பத்தில் ஒருவரைப் பிடித்து கணக்கு காட்டினர். இந்தச்சூழலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தின் அருகே உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வழியாக சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தப்படுவதைத்தடுக்க போலீசாரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திட்டச்சேரியை அடுத்த நடுக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.அப்போது அந்த வாகனத்தில் மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்த சாராயம் 200 பாட்டில்கள், 154 குவாட்டர் மதுபாட்டில்கள், 4 ஃபுல் பாட்டில்களைப் போலீசார் கைப்பற்றினர்.
மேலும்,ஜீப் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பதும், அவருடன் வந்தவர் வேளாண்துறையில் உதவியாளராக பணியாற்றும் அம்பிகாபதி என்பதும் தெரியவந்தது. மதுபானங்களை விற்பனைக்காக காரைக்காலில் இருந்து கீழ்வேளூருக்கு கடத்தியது தெரியவந்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். அரசு வாகனத்திலேயே மதுபானம் கடத்தியிருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us