Skip to main content

பல்லவன் இல்லம் முன்பு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்... (படங்கள்)

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

Government transport employees - pallavan illam chennai


சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகம் இல்லத்தின் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 


போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ''ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் சம்பளம் கொடுத்தார்கள். இந்த மாதம் ஒவ்வொரு தொழிலாளர்களின் சொந்த விடுப்பில் 5, 6 நாட்கள் கழித்து கொடுத்துள்ளார்கள். சம்பளத்தில் குளறுபடி செய்திருக்கிறார்கள். முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் இன்று போராட்டம் நடத்தினோம். போக்குவரத்து கழக எம்.டி. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக இதற்குத் தீர்வு காண்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தைக் கைவிட்டோம்'' எனத் தெரிவித்தார். 
 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் மக்கள் கவனத்திற்கு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Attention people who go to their hometowns and vote

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில், ‘2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 20/04/2024 மற்றும் 21/04/2024 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி. கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். 

மேலும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.அதே போல், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் (SETC உட்பட) அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். 

தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக (SETC உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.