ADVERTISEMENT

''சானிடைசரை குடித்துவிடுவேன்...''-பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழியர்களின் தர்ணா!

10:54 PM Aug 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்க் அருகே 2482 என்ற பதிவெண் கொண்ட அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணத்தில் சுமார் 23 ஆயிரம் ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளதால், முறைகேடு செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கடலூர் மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், மேற்பார்வையாளர் ரவி, விற்பனையாளர்களான ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன் ஆகிய 5 பேரையும், கடந்த 13-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தனர்.

இந்நிலையில் அக்கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வராத நிலையில், வழக்கம் போல் இன்று காலை மதுபானக் கடையை திறந்து, விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அக்கடைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட விற்பனையாளர்கள், கடைக்குள் சென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளரான ரமேஷ் என்பவர் மேற்பார்வையாளர் உத்தரவின்றி கணக்கு வழக்குகளை காண்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் புதிய விற்பனையாளர்கள் ரமேஷை உள்ளே வைத்து பூட்டு போட்டு பூட்டினர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது மதுபான கடையில் உள்ளே இருந்த ரமேஷ் கைகளுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த சானிடைசரை குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக காவல்துறையினர் மதுபானக்கடையை திறந்து உள்ளே ரமேஷ் வைத்திருந்த சானிடைசர் கேனை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே மதுபானக்கடை விற்பனையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு புதிதாக வந்த மேற்பார்வையாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் அலுவலர்கள் மது பாட்டில்களை கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். விற்பனையாளர்கள் கடையில் இல்லாதபோது கணக்கு எடுக்க கூடாது என்றும், அவ்வாறு கணக்கெடுக்கும் போது மது பாட்டில்கள், பணம் காணாமல் போய்விட்டால் அதற்கான பழி தங்கள் மீது வரும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய 5 பேரும் மதுபானக் கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிம் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர் மேற்பார்வையாளர் ரவி கூறுகையில், டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாளர் ரவிக்குமார் என்பவர் மேற்பார்வையாளர் பணியினை தக்கவைத்துக் கொள்ள 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாகவும், மேலாளர் லஞ்சமாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டதாகவும், இந்நிலையில் மாவட்ட மேலாளர் ரவிக்குமார் மீண்டும் லஞ்சம் கேட்பதால் தர இயலாது என்று கூறியதால் பழிவாங்கும் நோக்கத்தில் தாங்கள் பணிபுரியும் அரசு மதுபான கடையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலியான முறையில் விசாரணை செய்கிறார். அவ்விசாரணையில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரான ரமேஷ் என்பவரிடம், பண மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொள்ளுமாறு கையெழுத்து கேட்டுள்ளனர். ஆனால் மதுபான கடை விற்பனையாளர்களான தாங்கள் எவ்வித மோசடியிலும் ஈடுபட வில்லை என்று கூறி கையெழுத்திட மறுத்த நிலையில் அனைவரும் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டது போல போலியாக கையொப்பமிட்டு கடையில் பணிபுரியும் 5 பேரையும் பணி நீக்கம் செய்து விட்டதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு மதுபானக் கடையில், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவரின் மீதும் பண மோசடியில் ஈடுபட்டது போல் போலியாக சித்தரித்து 5 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், ஆடியோ ஆதாரம் மற்றும் மதுபானக் கடையில் இருந்த சி.சி.டி.வி ஆதாரம் கொண்டு ரமேஷ் என்பவர் கையெழுத்திட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், டாஸ்மாக் நிர்வாகத்தின் மாவட்ட மேலாளர் ரவிக்குமார் லஞ்சம் கேட்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர். பணியிலிருந்து நீக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய இந்த தர்ணாவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT