ADVERTISEMENT

கந்து வட்டி, கஞ்சா விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - கே.எஸ்.அழகிரி விருத்தாசலத்தில் பேட்டி!

11:27 PM Jun 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

''தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேடைப்பேச்சாளர் போல் பேசுகிறார். கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வார்த்தை பிரயோகம் இருக்கக்கூடாது. பா.ஜ.கவை விட காங்கிரஸ் கட்சி பல மடங்கு பெரிய கட்சி. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியை, பாஜக தலைவர் அண்ணாமலை சூடு, சுரணை இல்லை என்று சொல்லியிருப்பது விளம்பரத்திற்காக பேசுகிறார்.

சமீபத்தில் சென்னையில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களில், 90% மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் தமிழர்களின் நலனுக்காகத்தான் பேசுவார். அதை தவிர்த்து பிரதமரிடம் தமிழக மக்களை பற்றி முதல்வர் பேசாமல் என் மீதுள்ள வழக்கெல்லாம் விட்டுடுங்க, எங்கள் மீது வழக்கெல்லாம் போடாதீங்க? என்றா கேட்க முடியும்? தமிழக முதல்வர் பேசியது மாநிலத்தின் தேவை பற்றியும், மாநிலத்தின் உரிமைகளை பற்றியும் சிறப்பாக பேசியதை படித்துப் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வார்த்தை கூட பிசிரில்லாமல் அழகாக சொல்லியுள்ளார். ஆனால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வரைப் பற்றி கூறும்போது மேடையில் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். பிரதமரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென விதிமுறைகள் உள்ளதா? தமிழக முதல்வர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட பிரதமர் பதில் சொல்லவில்லை. சம்பந்தமில்லாத விஷயத்தை பேசி விட்டு சென்ற பிரதமரை, நான் சூடு சொரணை இல்லை என்று சொல்வது முறையா?

தமிழக அரசின் துறைகள் பற்றி பா.ஜ.க தலைவர் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். தெருவில் போகிறவர்கள் குற்றச்சாட்டு சொல்லலாம். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கமாக பதில் அளித்துள்ளார். முத்துசாமி அளித்த விளக்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? நான் தற்போது அவர்களை சூடு சொரணை இல்லை என கேள்வி கேட்கலாமா?

மாநிலத்தை ஆளக்கூடிய முதல்வருக்கு குடும்பம் இருக்கக்கூடாதா?, அது தவறா? மாநிலத்தில் எங்கு தொழில் நடந்தாலும்?, கட்டிடங்கள் கட்டப்பட்டாலும்? நிலம் வாங்கப் பட்டாலும்? அதற்கு முதல்வரின் குடும்பத்தில் தான் காரணம் என கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா? ஆதாரம் இருந்தால் கூறுங்கள் நாங்களும் கேட்டுக் கொள்கிறோம். நான் தி.மு.கவிற்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு எவ்வித பொருளும் இல்லை, குறைந்தபட்ச விளம்பரத்திற்காக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

கடந்த ஓர் ஆண்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்படுகிறது. குறைகள் இல்லை என்று கூற மாட்டேன். குறைவான குறைகளோடு நடைபெறும் அரசாங்கமாக உள்ளது. பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியையும், தி.மு.கவின் ஓராண்டு ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள், அதில் குறைகள் இருந்தால் கூறுங்கள். நானும் சேர்ந்து விமர்சிக்கிறேன்" என்று கூறினார்.

பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது. பழமை வாய்ந்த அத்திருக்கோயிலில், தீட்சிதர்களுக்கு சிறப்பு உரிமை உள்ளது. அதனை தீட்சிதர்களும் தங்களது எல்லைக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். புகழ்பெற்ற சைவ ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கரும்புள்ளி உள்ளது. இறைவனை வழிபாடு செய்ய சென்ற நந்தனாரை, தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை. அவர் வந்த பாதை கற்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் எழுந்துள்ள கணக்கு வழக்கு சம்பந்தமான பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும், தீட்சிதர்கள் எல்லை மீறக்கூடாது. தமிழக முதல்வர் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம் பற்றிய கேள்விக்கு, "ஆன்லைன் சூதாட்டம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும், அதற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல் கந்துவட்டி செய்யும் கொள்ளைக்கார கும்பல் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றில் தமிழக முதல்வரும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பள்ளி கல்லூரிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்வதற்கு தனியாக கும்பல் உள்ளது. கஞ்சா விற்பனை பற்றி போலீசாருக்கு தெரியாமல் இருக்காது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் போட வேண்டும். அக்கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்றும் அழகிரி கேட்டுக்கொண்டார்.

இந்த நேர்காணலின் போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT