Government of Tamil Nadu should immediately remove Anna University Vice Chancellor Surappa - V. Gauthaman

திரைப்பட இயக்குநரும் தமிழ்பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கௌதமன், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்த்து குறித்து மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சூரப்பா கடிதம் எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது;

Advertisment

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்திற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய சூரப்பாவிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் பல்கலைகழக ஆளுமைகளும் எங்கள் தமிழ் மண்ணில் நிறைந்து நிற்கின்ற போது வேற்று மாநிலத்தவரை திட்டமிட்டே மத்திய பாஜக அரசும் அவர்களின் உத்தரவிற்கு ஏற்ப அதிகாரத்தை வளைத்தெடுக்கும் தமிழக கவர்னரும் இவர்கள் இருவரின் பேச்சுக்காக காத்து நிற்கும் தமிழக அரசும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா அவர்களை நியமித்தார்கள். துணைவேந்தராக பொறுப்பற்ற நாட்களிலிருந்தே அண்ணா பல்கலைகழகத்தினை ஒரு கல்வி நிலையமாக பார்க்காமல் காவி நிலையமாக மாற்றுவதிலேயே குறியாக இருந்த சூரப்பா அவர்கள் இப்பொழுது அண்ணாவின் பெயரையும் தூக்கி எறிந்துவிட்டு அருகில் உள்ள ஐஐடி போன்று ஒருபோதும் எங்கள் தமிழ் மண்ணின் பூர்வக்குடி மாணவர்கள் படிக்க முடியாத நிலையினை உருவாக்க உயர் அந்தஸ்து வேண்டியும் அதற்கான நிதியை தாங்களே ஏற்படுத்திக் கொள்வோம் என்றும் அதிகார வரம்பு மீறி திமிரான ஒரு முடிவெடுத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டுமல்ல சகித்துக் கொள்ள முடியாததும் கூட.

மூன்றாண்டுகளுக்கு மட்டும் எங்கள் தமிழ்நாட்டிற்கு வேலை செய்ய வந்த சூரப்பா அவர்களுக்கு நீண்ட நெடுங்காலமாக இயங்கிவரும் எங்கள் கல்வி நிலையத்தின் பெயரையும் மாற்றி உரிமையையும் பறிக்க எவர் அதிகாரம் தந்தது? அத்துமீறிய இந்த ஒற்றைச் செயலுக்காகவே உடனடியாக சூரப்பா அவர்களை தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சின் தீவிர செயல்பாட்டாளரான சூரப்பா அவர்கள் ஒரு மாநில அரசின் உதவியை வேண்டாமென புறந்தள்ள இவர் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிநியா? தொடர்ந்து மாணவர்களின் உயிரை காவு வாங்கும் இன்னொரு ஐஐடி யாக அண்ணா பல்கலைகழகம் மாறி விடவும் கூடாது. மாறவும் விடமாட்டோம்.

Advertisment

தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர்சூட்டிய அண்ணாவின் பெயரை பல்கலைகழகத்திற்கு சூட்டி பெருமிதம் கொண்டவர்கள் தமிழர்கள். அப்படிப்பட்ட தமிழர்களின் உணர்வோடு விளையாடும் விபரீத விளையாட்டினை சூரப்பா அவர்களும் அவரை ஆட்டிப் படைப்பவர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய அ.தி.மு.க அரசோ அமைதியாக இருப்பதோ வேதனையளிப்பதோடு வெட்கப்படவும் வைக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு பேராபத்து வரும் என்பதை உணர்ந்த நாங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தினை ஒருபோதும் ஏற்கக்கூடாது என்று சொல்லி சென்னை தலைமைச் செயலகத்திற்கே நேரடியாக சென்று உரிமை குரல் எழுப்பினோம். அப்பொழுதெல்லாம் ஆளுங்கட்சி ஒருபோதும் சிறப்பு அந்தஸ்தினை ஏற்கமாட்டோம் என்று கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. கே.சி.அன்பழகன் அவர்கள் மூலமாக அறிக்கை விட்டுவிட்டு இப்பொழுது தெரிந்தே கோட்டை விட முடிவெடுத்திருப்பது கோட்டையையும் சேர்த்தே விட்டுவிட முடிவெடுத்து விட்ட நிலையைத்தான் காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கான எங்கள் வீட்டுப்பிள்ளைகளின் கல்வி உரிமையை காக்க தமிழ்பேரரசு கட்சி அறவழியிலான பெரும் உக்கிரமான போராட்டத்தை கையில் எடுக்கும் என்பதனை அடிவயிற்றின் தகிப்போடும் அறச்சீற்றத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.