Advertisment

“பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்..” - திருமாவளவன் 

publive-image

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம். இது மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; மாநில உரிமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிய அன்றைய அதிமுக அரசையும்; ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து பேரறிவாளனின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு அதை சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த இன்றைய திமுக அரசையும் குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

Advertisment

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளனுக்கும், அவரது விடுதலைக்காக இடைவிடாமல் போராடிய 'அறம் காத்த அன்னை' அற்புதம் அம்மாள் அவர்களுக்கும் எமது வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

பேரறிவாளன் இப்போது விடுதலை ஆகியிருக்கும் நிலையில், அதே வழக்கில் அதே கால அளவில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட மற்ற ஆறு பேருக்கும் அதே சட்ட வரையறைகளின்படி விரைவில் விடுதலை கிடைத்திட வழி பிறக்குமென நம்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இந்த வழக்கின் விசாரணையின்போது அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தணடனைக் குறைப்பு அதிகாரம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த பல கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எடுக்கும் முடிவை கிடப்பில் போட்டு வைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குத் தீர்வினை அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில், அவற்றைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதுவரை இயற்றியுள்ள சட்டங்களுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

19 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் இப்போது 50 வயதைக் கடந்தவராக விடுதலை ஆகியிருக்கிறார். அவர் இழந்த இளமையை, வாழ்க்கையை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. எனினும் எஞ்சியுள்ள வாழ்நாளை அவர் அமைதியாக கழிக்கும் வகையில் அவருக்கு மீள்வாழ்வளிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு கருணைகூர்ந்திட வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Thirumavalavan Perarivalan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe