Government of Tamil Nadu ordered to remove brick kilns on elephant route without delay !!

கோவை தடாகம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை, தாமதமின்றி அகற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப் பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல், கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில்,சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி,சின்ன தடாகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

இந்தச் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக,மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிம வளத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், வனத்துறையுடன் கலந்தாலோசித்து, விதிமீறல் செங்கல் சூளைகளைக் கண்டறிய இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

Advertisment

அதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், ‘அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளைக் கண்டறிந்து, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை,தாமதமின்றி அப்புறப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.’ என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.