/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt6_0 (1)_12.jpg)
தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று (25/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "23/12/2021 அன்று மாலை தலைமைச் செயலகத்தில், தொழில்துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர்ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பி. தாமரைக்கண்ணன் இ.கா.ப. ஆகியோர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுத் தரப்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகளை / அறிவுறுத்தல்களை வழங்கி, அதனைச் செயல்படுத்துமாறு தெரிவித்தார்கள்.
அதன் விவரங்கள் பின்வருமாறு, 'ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபுரியும் சூழ்நிலைகளை மேம்படுத்தித் தர வேண்டும். தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தித் தர வேண்டும். தேவையான இடவசதி, குளியலறை, கழிவறை, குடிதண்ணீர், காற்றோட்டமான அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும்.
தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரிய தரச்சான்று பெற வேண்டும். தங்கும் இடத்திலேயே சமையலறை அமைத்து, தரமான உணவுகளை சமைத்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவசர நிமித்தம் காரணமாக விடுப்பு கேட்கும்போதுவழங்க வேண்டும். விடுப்பில் செல்லும் தொழிலாளர்களுக்கு மாற்றாக தேவையான தொழிலாளர்களை மனிதவள முகமைகள் செய்து தர ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினர், தமிழ்நாடு அரசுத் தெரிவித்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தவறாமல் செயல்படுத்துவதாக தெரிவித்தனர். பெண் தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும், மேலும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 15,000 தொழிலாளர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது எனவும், அதனை ஒப்பந்ததாரர்கள் தரமாக வழங்குவதை இனி உறுதிசெய்வதாகவும் தெரிவித்தனர். தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இத்தொழிற்சாலையை இவ்விடத்திலேயே விரிவுபடுத்தி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் எனவும் உறுதியளித்தனர்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)