Skip to main content

விவசாய கடன் பெறுவதற்கு புதிய கணக்கு தொடங்கும் நடைமுறையை துரிதப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020
Government of Tamil Nadu instructed to expedite the process of opening a new account to obtain agricultural credit!

 

 

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதற்கு, மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கும் நடைமுறையைத் துரிதப்படுத்த, தேவையான நடைமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் விவசாய கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கி, அவற்றின் மூலமாகப் பெற வேண்டும் என,  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடந்த ஜூலை 7 -ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

கிராமப்புற விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும், வங்கிக்கணக்கு துவங்க அவகாசம் அளிக்காமல்,  இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகவும் கூறி, இதை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அவற்றை, விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்து பெற்று, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கணக்குகள் துவங்கப்படும்.   மேலும், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு, 2 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சம் ரூபாய் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, மாநிலத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அத்தனை விவசாயிகளுக்கும் கணக்கு துவங்குவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதால், கணக்கு துவங்கும் நடைமுறையை துரிதப்படுத்த, தேவையான நடைமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நபார்டு வங்கிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.