
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதீத மழைப் பொழிவு இருந்தது. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் அரசு நிர்வாகம் துரித கதியில் செயல்பட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீர் செய்யப்பட்டு, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, காஞ்சிபும், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பாதிப்பு தொடர்பான ஆய்வை முடித்திருந்த நிலையில், தற்போது டெல்டா, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்.
கடந்த இரண்டு தினங்களாக மழை பாதிப்பு உச்சத்தில் இருக்கும் குமரியில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செய்துள்ளதாகவும், மழையை சமாளிக்க தமிழ்நாடு அரசு உறுதியாக இயங்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மழை பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "இந்தப் பேரிடரை தமிழக அரசு நல்ல முறையில் கையாண்டுள்ளது. முதல்வருடைய பணி மெச்சத்தக்கதாக உள்ளது. விரைவில் தமிழ்நாட்டு மக்கள் இந்த மழை பாதிப்பிலிருந்து மீள்வார்கள்" என்றார்.