ADVERTISEMENT

கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு

01:17 PM Jan 05, 2024 | prabukumar@nak…

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.

ADVERTISEMENT

அதன்படி இந்த ஆண்டும் (2024) பொங்கல் பரிசாகத் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 238 கோடியே 92 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை இடம் பெற்றிருந்தது.

ADVERTISEMENT

அதே சமயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ரூ. 1000 ரொக்கம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். அதோடு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டியும், சேலையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு எந்த நிதியையும் தராத நிலையில், தமிழக அரசே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கியது. தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ. 1000 உரிமைத் தொகை, பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10 ஆம் தேதியே (புதன்கிழமை) வரவு வைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் உரிமைத் தொகை பெற்று வரும் நிலையில், மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு அளித்திருந்தனர். இந்த மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தவும் கூடுதல் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்திருந்தது. அதன்படி, 8 சிறப்பு வட்டாட்சியர்கள் மற்றும் 101 துணை வட்டாட்சியர்கள் பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT