



கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை என் பெயரில் வெளியிடப்பட்டாலும், இதில் பலரது உழைப்பு இருக்கிறது. முதல்வர் காட்டிய வழியில் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தெளிவில்லாமல் இருந்தது. ஆனால் இதில் அனைத்து தகவலும் இடம்பெற்றுள்ளது. எந்தத் தகவலை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கேட்டோமோ, அதை நாங்கள் ஆளும் கட்சியாக செயல்படுத்திவருகிறோம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த வெள்ளை அறிக்கையில் ஏதேனும் பிழை இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. அதனால் என் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழக அரசுக்கு தற்போது கடுமையான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் வருவாய் உபரியாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் நிலைக்கு மாநிலம் சென்றுள்ளது. தமிழகத்தில் 2020 - 2021ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை 61,320 கோடியாக இருக்கிறது. 2011 - 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 17,000 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அதிமுக அரசின் 2016 - 2021 ஆட்சியில் இந்தப் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடனாக 2.63 லட்சமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார். தொடர்ந்து அவர் நிதிநிலை தொடர்பாக பேசிவருகிறார்.