Government of Tamil Nadu denies permission for decorative parade vehicle

குடியரசு தின விழாவை ஒட்டி தமிழக அரசின் அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை வன்மையாகக்கண்டிக்கிறோம் என்று முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், "இந்தியா சுதந்திரம் பெற்று முழுமை அடைந்த நாள் ஜனவரி 26. குடியரசு தினவிழாவை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள், வரலாற்றுச் சுவடுகள் பதித்த அலங்கார அணிவகுப்பு நடைபெறுவதும் வழக்கம். அப்படிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

Advertisment

இந்திய துணைக்கண்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசை எதிர்த்து படை திரட்டி போராடி இழந்த சமஸ்தானத்தை மீண்டும் மீட்டெடுத்த வரலாற்றுப் பெருமைக்குரிய முதல் பெண் ராணி வேலுநாச்சியார். இவரது வரலாற்றை இருட்டடிப்பு செய்துதான் ஜான்சிராணி வரலாற்றை பாடத்திட்டத்தில் திணித்தார்கள். இப்போது நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில்கூட அனுமதி மறுக்கப்பட்டு தமிழகத்தையே அந்தப் போராட்ட வரலாற்றில் இருந்து அப்புறபடுத்தப் பார்க்கிறது பாஜக அரசு.

மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராகப் பணியாற்றி தேச விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்துப் போராடி சுதேசிக் கப்பல் விட்டு அதற்காக சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தன் கவிதைகளால் தேசப்பற்றையும், விடுதலை உணர்வையும் ஊட்டி இந்தத் தேசத்தின் மகாகவியாக விளங்கியவர் பாரதியார். இவர்களது படங்கள் கொண்ட அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுத்தது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநில வாகனங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் பாஜக இந்த நாட்டை சங்பரிவாரங்களின் நாடாக்க துடிக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. மத்திய அரசு உடனடியாக இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.