ஜெயலலிதா நினைவு இல்லம் கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டுக்கு ஒப்புதல்!

Government of Tamil Nadu approves appeal against order not to allow Jayalalithaa to enter memorial building

நினைவில்லமாக மாற்றப்பட்ட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, வேதா நிலைய கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை 29ஆம் தேதி விசாரிப்பதாக, தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கி, அதை நினைவில்லமாக மாற்றியுள்ளது. நேற்று (28.01.2021) அதன் திறப்புவிழா நடைபெற்றது.

இந்நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு 69 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி என்.சேஷசாயி விசாரித்து, இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

அதில், நினைவில்லம் திறப்பு விழாவை நடத்த அனுமதி அளித்து, இதற்காக அப்பகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவும் பிறப்பித்திருந்தார்.அதேசமயம், வேதா நிலைய வளாகத்தின் நுழைவுவாயிலைத் திறந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்றாலும், வேதா நிலைய பிரதான கட்டடத்தை திறக்கக் கூடாது, ஜெயலலிதாவின் உடைமைகள் முறையாக கணக்கெடுக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது, நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாவியை தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

வேதா நிலைய பிரதான கட்டடத்தில் அனுமதிக்காதது உள்ளிட்ட இரண்டாம் பகுதி உத்தரவுகளை எதிர்த்து,தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கடந்த 27-ஆம் தேதி இரவே,தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் காணொளி மூலமாக ஆஜராகி கோரிக்கை வைத்தனர்.

அதை விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும், அதேசமயம் மேல்முறையீடு வழக்கை வெள்ளிக்கிழமை (ஜனவரி 29ல்) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

highcourt poes garden
இதையும் படியுங்கள்
Subscribe