/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-highcourt_1.jpg)
வாடகை கார் ஓட்டுநர் தற்கொலை சம்பவத்தில், தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையினர் தொடர்ந்த வழக்கில் மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூர் டி.எல்.எஃப்.பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வாடகை கார் ஓட்டிய ராஜேஷ், கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திருமங்கலத்திருந்து அந்நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்து வருவதற்காக காலை 8 மணியளவில் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி உள்ளார்.
அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் இருவர், ராஜேஷை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன்னதாக தனது தற்கொலை முடிவிற்கு இரு போக்குவரத்து காவலர்களே காரணமென தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதற்கிடையில் ராஜேஷின் சகோதரர் ராம்குமாரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-high-court_6.jpg)
விசாரணைக்கு பிறகு சம்பவ இடத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற தங்கம் மற்றும் தலைமை காவலர் பெருமாள் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ராஜேஷின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற தங்கமும், பணியிலிருக்கும் பெருமாளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் மனுவில், சம்வத்தன்று காலை திருமங்கலம் பகுதியில் இரு சக்கர வாகன விபத்து நடந்ததாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ராஜேஷ் பதிவுசெய்த வீடியோவில் கூட போக்குவரத்து காவலர்கள் என்றுதான் கூறியுள்ளாரே தவிர, யாரையும் குறிப்பிடவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை ஆணையம் விசாரித்தபோது, ராஜேஷின் காரில் இருந்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் விசாரிக்கவில்லை என்றும், தாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை எனவும், அதனால் தற்கொலை நிகழவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்யவும், இந்த வழக்கு முடியும் வரை அந்த உத்தரவிற்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரின் வழக்கு குறித்தும் 3 வாரத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)