தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர் பிரபஞ்சன். சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்கிற பிரபஞ்சன் புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1961-ல் வெளியானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1995-ல் அவரது 'வானம் வசப்படும்' என்ற நூல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. மேலும் பாரதிய பாஷா பரிஷத் விருது, கஸ்தூரி ரங்கம்மாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, சி.பா.ஆதித்தனார் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.
புதுச்சேரியில் வசித்து வந்த பிரபஞ்சன் கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . கடந்த மாதம் மேலும் உடல் நலிவடையவே மதகடிபட்டிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11.45 க்கு அவர் காலமானார்.
பிரபஞ்சன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புதுசேரி முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். பாரதி வீதியில் பிரபஞ்சனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபஞ்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி பிரபஞ்சனின் உடல் நாளை மாலை 4 மணிக்கு சன்னியாசி தோப்பு பகுதியில் உள்ள இடுகாட்டில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.