Skip to main content

"கோவில் ஜீயரை தேர்ந்தெடுப்பதில் அரசு தலையிடக் கூடாது" - வைணவர்கள் கண்டனம்! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Government should not interfere in the selection of temple zealots

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 51வது ஜீயர் பதவிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய உடன் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தீர்த்தகாரர்கள், ஸ்தலதாரர்கள் இணைந்து இந்த ஜீயர் பதவிக்கான தேர்ந்தெடுக்கப்படும் சுற்றறிக்கையைக் கண்டித்து தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

 

அதில், “ஜீயர் என்ற முழுமையான சன்னியாசம் அடைந்து தீட்சைபெற்று மோட்சத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய மிக உன்னதமான பதவியை, ஏதோ அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய தட்டச்சர்களும், அலுவலக உதவியாளர்களும் போல ஜீயரைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 26இன் படி, அரசு எந்த சமய உள்ளீடுகளிலும் தலையிடக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ராமானுஜருக்கு பிறகு இதுவரை சுமார் 50 ஜீயர்களையும் ஸ்தலதாரர்கள் தீர்த்தகாரர்கள் இணைந்து தேர்ந்தெடுத்து வந்த நிலையில், 51வது ஜீயரை மட்டும் அரசு தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன?

 

அறநிலையத்துறையினுடைய பணி என்பது கோவில் சொத்துக்களை நிர்வகிப்பது, பராமரிப்பது என்பதோடு மட்டுமே என்பதை அவர்கள் அறிந்திருந்தும், சமய நம்பிக்கைக்குள் நுழைவது என்பது அத்துமீறல் என்றும், இது வைணவர்களை மொத்தமாக ஆக்கிரமிக்கும் செயல் என்பதும் இந்த அரசு உணர வேண்டும். தேவஸ்தானம் அறங்காவலர்கள் குழு ஜீயரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அவர் சாதாரணமானவர் அல்ல. அவர்தான் ஸ்ரீரங்கம் கோவிலின் தலைமை குரு. அவருக்கென்று பல பூஜை புனஸ்காரங்களும் பல்வேறு சடங்குகளும் நடத்துவதற்கான அதிகாரம் உடையவர். எனவே எங்களுடைய நம்பிக்கைக்குள் அரசு ஒருபோதும் தலையிடக்கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்