ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக விலகலை முறையாகக் கடைப்பிடித்து இதுவரை 96 சதவீதம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wdwe_5.jpg)
இதையடுத்து, கரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கைதள்ளி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_72.gif)