Advertisment

புயலில் பாதித்த மீனவர்களுக்கு அரசு உதவ வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

Advertisment

மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையை அடுத்த மகாபலிபுரம் கடல் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால், நேற்று இரவு முழுவதும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசியது. இதில், பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. அதேபோல், சென்னை காசிமேடு துறைமுகம் உட்பட மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கரையிலும் துறைமுகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பெரும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை அரசு சீரமைத்து தரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள். அதே நேரத்தில் கடலோரப்பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் இடிந்துள்ளன.

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்.மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

pmk anbumani Mandous Cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe