/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbumani-in_2.jpg)
“சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்பும் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பிரச்சனை மிகவும் எளிதானது. அதை புரிந்து கொள்வதற்கு நுணுக்கமான புலமை தேவையில்லை” என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆளுகையின் கீழ் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தங்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்துக்கு இணையாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் உணர்வுகளை புரிந்திருந்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வராததும், இந்த விஷயத்தில் குழப்பம் நீடிக்க அனுமதிப்பதும் நியாயமற்றது ஆகும்.
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்பும் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பிரச்சனை மிகவும் எளிதானது. அதை புரிந்து கொள்வதற்கு நுணுக்கமான புலமை தேவையில்லை. 2013-ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவரை இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணமாக ரூ.5.44 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் கூட தொடர்ந்து அதே கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியும், மாணவர்களும் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனைத்து எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கும் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதைப் போன்றே ஆண்டுக் கட்டணமாக ரூ.13,610, பி.டி.எஸ் கட்டணமாக ரூ.11,610, அனைத்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் கல்விக்கட்டணமாக ரூ.30,000 மட்டும் வசூலிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணை அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எந்த சிக்கலும் எழுந்திருக்காது.
ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 122 தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் தான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இன்னொரு ஆணையின்படி 2016 -18 ஆண்டுகளுக்கு ரூ.5.44 லட்சம், 2018-20 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம், அதன்பிறகு அரசு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? என்பதே மாணவர்களின் வினா.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனாலும் கூட, அதே கல்லூரியில் 2020-21 ஆம் ஆண்டுக்கு முன் சேர்ந்தவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களாக கருதப்படுவார்கள்; அதற்கு பிறகு சேந்தவர்கள் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள்; அவர்களுக்கான தேர்வுகளை மாணவர் சேர்க்கை ஆண்டுகளின் அடிப்படையில் இரு பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக நடத்தும்; முன்பே சேர்ந்தவர்கள் உயர்கல்வித்துறையின் கீழும், பின்னர் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வித் துறையின் கீழும் வருவார்கள் என்பதும் குழப்பங்களின் உச்சம் ஆகும். அரசு நினைத்தால் இதை தீர்க்க முடியும்.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை முழுமையாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை.யின் கீழ் கொண்டு வருவதும், அனைத்து மாணவர்களுக்கும் அரசுக் கட்டணத்தை வசூலிப்பதும் தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துச் சென்று விட்டார்கள். 2020-21 ஆம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும்; அவர்களுக்கும் கூட அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்க வேண்டியிருக்கும். இதற்காக அரசுக்கு பெரும்தொகை செலவாகாது.
தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழிற்படிப்புகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி வருகிறது. இது பாராட்டத்தக்க நடவடிக்கை ஆகும். இதற்காக ஆகும் செலவுடன் ஒப்பிடும் போது இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணக் குறைப்பு செய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு தான். அதுவும் கூட இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தான். எனவே, மாணவர்களின் நலன் கருதி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ஆண்டு கட்டணமாக ரூ.13,610 மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)