/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai-highcourt_34.jpg)
நீர்நிலைகளில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் ஏற்படாத வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமித்துள்ள 403 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீசை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், வரைபடங்களை மாவட்ட வாரியாக தொகுத்துத்தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படாமல் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுப்பதை முன்னோடி திட்டமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத்தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)